கட்டிட மேஸ்திரி கொலை வழக்கு: சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்,
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி காலை வழக்கம் போல கட்டிட பணிக்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் 60 அடி ரோடு சந்திப்பில் உள்ள பூங்கா அருகே வந்த போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆரோக்கியசாமி வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதில் ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆரோக்கியசாமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன்(35) என்பவரும் திருப்பூரில் கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து சென்று வந்து உள்ளார். தொழிலாளர்களை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதில் ஆரோக்கியசாமிக்கும், அறிவழகனுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்த தொழில் போட்டி காரணமாக ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய அறிவழகனையும், அவருடன் இருந்த வாலிபரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய அறிவழகன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆனந்த்(28) ஆகிய 2 பேரும் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை திருப்பூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விசாரணைக்கு பின்னர் தான், ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து முழு தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.