ஈரோட்டில் நடந்த பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஈரோட்டில் நடந்த பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-10 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 37). பெயிண்டர். இவர் தனது நண்பர்களுடன் நாடார்மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சம்பவத்தன்று மது அருந்த சென்றார். அப்போது போதை தலைக்கேறியதும் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுநாதனின் வயிற்றில் குத்தினார்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மஞ்சுநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மஞ்சுநாதன் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுநாதனை கொலை செய்ததாக அவருடைய நண்பர்கள் ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்த செந்தில் குமார் (வயது 42), நாடார்மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் (45), பச்சப்பாளியை சேர்ந்த தாமோதரன் (31) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த முருகன் (47) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முருகன் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்