கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தினர்.

Update: 2019-05-10 22:15 GMT
கரூர், 

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய யோகா தினத்தை கொண்டாடும் பொருட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை புதுடெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்க இருக்கின்றனர். அந்த வகையில் வருகிற 15-ந்தேதி அன்று நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடக்கிறது.

இதில் கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து யோகாசனத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு, கரூர் மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் தேர்வு போட்டிகள் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) உஷா தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அமலிடெய்சி முன்னிலை வகித்தார்.

6-8-ம் வகுப்பு மற்றும் 9-10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் என 2 பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடந்தன. இதில் கரூர், குளித்தலை உள்பட பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது சூரிய நமஷ்காரம், சர்வாங்கஆசனம், சிரசாசனம், பிறை ஆசனம், தனூர் ஆசனம், மயூர்ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்து காண்பித்து மாணவ, மாணவிகள் அசத்தினர்.

இதில் யோகாசனத்தின் தொடக்க நிலையை லாவகமாக மேற்கொள்ளுதல், நளினத்துடன் உடலை வளைத்தல், மூச்சை அடக்கி உடலை சீராக வைத்திருத்தல், குறித்த நேரத்திற்குள் ஆசனங்களை செய்து முடிப்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் திறமை பரிசோதிக்கப்பட்டது. முடிவில் தேர்வுக்குழுவினர் மூலம் 6-8-ம் வகுப்பு மற்றும் 9-10-ம் வகுப்பு பிரிவுகளில் தலா 4 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்