காயத்துடன் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது செத்த பரிதாபம்
எச்.டி.ேகாட்டை அருகே காயத்துடன் வீட்டுக்குள் புகுந்து மயங்கிய சிறுத்தையை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக செத்தது.
மைசூரு,
எச்.டி.ேகாட்டை அருகே காயத்துடன் வீட்டுக்குள் புகுந்து மயங்கிய சிறுத்தையை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக செத்தது.
சிறுத்தை வீட்டுக்குள் புகுந்தது
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கியாத்தனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி அந்த கிராமத்தில் புகுந்தது. இந்த சிறுத்தையை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த நிலையில் அந்த சிறுத்தை கியாத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த வீரண்ணசாமி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து, கதவை வெளிபுறமாக பூட்டி சிறுத்தையை சிறைபிடித்தனர்.
செத்தது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். வீட்டுக்குள் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவில்லை. இதனால் வனத்துறையினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் சிறுத்தை மயங்கிய நிலையில் கிடந்தது. இதனால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்தனர்.
பின்னர் அந்த சிறுத்தையை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுத்தை பரிதாபமாக செத்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்து அந்தப்பகுதியில் குழித்தோண்டி புதைத்தனர்.
காயம்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், கியாத்தனஹள்ளி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஏற்கனவே காயமடைந்திருந்தது. இதனால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயங்கி விழுந்துள்ளது. அந்த சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, அது பரிதாபமாக செத்தது என்றார்.