100 நாள் வேலை கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

100 நாள் வேலை கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-10 22:15 GMT
வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டு வந்து, 100 நாள் வேலை கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அவர்கள் கூறுகையில், வெங்கனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும் தங்களுடைய விவசாய நிலங்களில் கரை அமைக்கப்படுவதாக கூறி, பலர் தங்களது நிலங்களில் கரைகள் அமைக்காமலேயே திட்ட நிதியை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபரின் வயல்களில் கரை அமைக்கப்படுவதை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். வெங்கனூர் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தினமும் வேலைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்று தெரிவித்தனர். பின்னர் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவழகனிடம் கொடுத்தனர். அப்போது அவர் திட்ட அனுமதி பெற்று விரைவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்