மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குளவாய்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 40). இவருடைய மனைவி பவுலின்மேரி (35), மகன் டோம்னிக் (15). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் லஞ்சமேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் இரவில் அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆரோக்கியம் ஓட்டினார். பவுலின் மேரி, டோம்னிக் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.
வடக்காட்டுப்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பவுலின் மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆரோக்கியம், டோம்னிக் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கிளனர் திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்த முரளி (40) இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், படுகாயத்துடன் கிடந்த ஆரோக்கியம் மற்றும் டோம்னிக்கை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பவுலின் மேரி, முரளி ஆகியோருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டோம்னிக் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை அருகே நடந்த விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.