காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ராஜினாமா செய்ய முடிவு கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் எடியூரப்பா பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி என்றும் எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.;

Update: 2019-05-10 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க...

ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா கட்சி, ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்பு பா.ஜனதா நடத்திய ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதே நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதுபோல் மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப் படுகிறது.

ஆட்சி கவிழ்ந்துவிடும்

இதனை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எடியூரப்பா மீண்டும் தெரிவித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

20 காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குந்துகோல் மற்றும் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை பா.ஜனதா தீவிரமாக எடுத்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறது. அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா வசம் தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் பட்சத்தில், எம்.எல்.ஏ.க்களின் பலம் 108 ஆக உயரும்.

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க் கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும். அதன்மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதி.

வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெறுவது போல, நாடாளுமன்ற தோ்தலில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மண்டியா, துமகூரு, கலபுரகி, சிக்பள்ளாப்பூர் தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைவது உறுதி. மண்டியா, துமகூரு நாடாளுமன்ற தொகுதிகளில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால் தான் முதல்-மந்திரி குமாரசாமியும், தேவேகவுடாவும் ரெசார்ட் ஓட்டல்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமியோ, மந்திரிகளோ ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்