போடி அருகே பரபரப்பு, 6 துப்பாக்கிகள்-பயங்கர ஆயுதங்களுடன் த.ம.மு.க. பிரமுகர் கைது - 10 பேர் தப்பி ஓட்டம்
போடி அருகே துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்த 10 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தில் வசிப்பவர் கவுர்மோகன்தாஸ் (வயது 51). இவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். இவருடைய வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருந்து, கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வருவதாக போடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் பொட்டல்களம் கிராமத்துக்கு சென்றனர். கவுர்மோகன்தாஸ் வீட்டை நெருங்கியபோது, அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் கவுர்மோகன்தாசை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அவருடைய வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், அங்கு துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அந்த வீட்டில் இருந்து 6 துப்பாக்கிகள், 20-க்கும் மேற்பட்ட கத்திகள், ஏராளமான அரிவாள், ஈட்டிகளையும், 3 கோபுர கலசங்களையும் போலீசார் கைப்பற்றினர். அவருடைய வீட்டில் நின்ற காரையும் போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்டவை, ஏ.கே. 47 ரக துப்பாக்கி, ஏர்கன், ஸ்டென்கன், நாட்டு துப்பாக்கி போன்ற ரக துப்பாக்கிகள் ஆகும். அவற்றை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கவுர்மோகன்தாசை குரங்கணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ரகசிய விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுர்மோகன்தாசை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து தப்பி ஓடிய 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், கோபுர கலசங்கள் விற்பனை என்ற பெயரில் மோசடிகளை செய்யவும் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி கள் அனைத்தும் போலியானவை. கத்திகள் விதவிதமான வடிவங்களில் உள்ளன. இந்த கும்பல் கொள்ளை மற்றும் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கோபுர கலசங்களை வைத்து நூதன முறையில் மோசடி செய்யவும், துப்பாக்கிகளை காட்டி மிரட்டி தப்பித்துக் கொள்ளவும் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். தமிழகத்தில் சில இடங்களில் இந்த கும்பலில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
தப்பி ஓடியவர்களில் ஒருவர் போடிமெட்டு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு இந்த துப்பாக்கிகள், கோபுர கலசங்களை வைத்து ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது விசாரணையில் தெரியவரும். தப்பி ஓடியவர்கள் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.