குழித்துறையில் பரிதாபம் மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
குழித்துறையில் மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
களியக்காவிளை,
மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் வில்சன், கட்டிட தொழிலாளி. இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மகேஷ் (வயது 25), விஜீ (22) என்ற 2 மகன்களும், வின்ஷா (20) என்ற மகளும் உள்ளனர்.
மகேஷ் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பிரபல இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். தினமும் காலையில் வேலைக்கு சென்று வீட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று வேலைக்கு சென்ற மகேஷ் கம்பெனியில் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததுது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து மகேஷ் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு மகேஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதை தொடர்ந்து மகேஷின் மரணம் இயற்கையானது அல்ல என்று கூறி உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தனியார் நிறுவனத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சர்வீஸ் நடக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நிர்வாக தரப்பில் கூறப்பட்டது. அதைதொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே மகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.