குழந்தைகள் விற்பனை வழக்கு: மேலும் ஒரு நர்சு அதிரடி கைது சேலத்தை சேர்ந்தவர்
குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் ஒரு நர்சு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் சேலத்தை சேர்ந்தவர் ஆவார்.
சூரமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர்(நர்சு) அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஹசீனா, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, முருகேசன், அருள்சாமி ஆகியோரை நாமக்கல் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதில் அமுதவள்ளியிடம் விசாரணை முடிந்ததையொட்டி அவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைகள் விற்பனை தொடர்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம் ஆகிய வட்டாரங்களில் களஆய்வு மேற்கொண்டனர். இந்த களஆய்வு அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அந்த களஆய்வில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில் காவலில் எடுத்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ராசிபுரம், கொல்லிமலையை மையமாக வைத்து இந்த குழந்தைகள் விற்பனை நடந்துள்ளது தெரியவந்தது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் குழந்தைகள் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் இந்த குழந்தைகள் விற்பனையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த நர்சுகள் உள்பட வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என பலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் கைதான ஹசீனா, பர்வீன் ஆகியோரை கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒரு நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் மூலம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார செவிலியர் உதவியாளராக(நர்சு) பணியாற்றும் சாந்தி(வயது48) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாந்தியை அதிரடியாக கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து முருகேசன், அருள்சாமி, ஹசீனா, பர்வீன் ஆகியோரது காவல் விசாரணை முடிவடைந்ததால் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் கோர்ட்டுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் இந்த வழக்கில் கைதான மேலும் ஒருவரான சாந்தியையும் போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள லீலா, செல்வி ஆகியோரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைதான சாந்தியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.