மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி: விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 62). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காசி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நூக்காம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகனின் மகன் சத்தியராஜ் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், விபத்து ஏற்படுத்திய சத்திராஜூக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சத்தியராஜை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.