கீரமங்கலம் அருகே வவ்வால்களை பாதுகாத்து வரும் கிராம மக்கள்
கீரமங்கலம் அருகே வவ்வால்களை கிராமமக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வெள்ளையப்பன் கோவில் காட்டில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் இருந்தன. இந்த மரங்களில் பல ஆயிரம் வவ்வால்கள் தங்கி இருந்தன. மாலை 5 மணிக்கு மேல் இரை தேடி செல்லும் வவ்வால்கள் அதிகாலை 4 மணி முதல் மீண்டும் வெள்ளையப்பன் கோவில் காட்டில் உள்ள ஆலமரங்களில் வந்து அடைந்துவிடுவது வழக்கம்.
அந்த கிராம மக்கள் வவ்வால்களை வேட்டையாடாமல் பாதுகாத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வெளியூர்களில் இருந்து யாராவது வேட்டையாட வந்தாலும் அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிகாலை வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில் வவ்வால்கள் தங்கி இருந்த ஆலமரங்களின் கிளைகள் உடைந்தன. மொத்த காடுகளிலும் உள்ள மரங்கள் உருக்குலைந்து விட்டன. மேலும் வவ்வால்களும் பாதி அளவுக்கு குறைந்து விட்டன. சாய்ந்த மரங்களில் தற்போது சில மரங்கள் துளிர்விட தொடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்க வழியில்லாததால் கடும் வெயிலில் பட்ட மரங்களின் கிளைகளிலேயே பகலில் தொங்குகின்றன. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பட்ட மரத்தில் தொங்கும் வவ்வால்கள் அடிக்கடி பச்சை மரங்களை நோக்கி சென்றாலும் மீண்டும் பட்ட மரக் கிளைகளுக்கு வந்து செல்கின்றன.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக வவ்வால்களின் சரணாலயமாக வைத்து போற்றி பாதுகாத்து வந்தோம். ஒரு குச்சியை கூட காட்டில் இருந்து எடுக்க மாட்டோம். ஆனால் கஜா புயல் மொத்த மரங்களையும் உடைத்து சாய்த்ததால் வவ்வால்கள் தங்க வழியின்றி தவிக்கின்றன. ஆனாலும் வழக்கமான தங்களின் வாழ்விடத்தை விட்டு போகாமல் பட்ட மரக்கிளைகளில் கொளுத்தும் வெயிலில் தொங்கிக் கொண்டிருக் கின்றன. பல நேரங்களில் வெயிலின் தாக்கம் தாங்காமல் அவை இறந்து விழுகின்றன. இதனால் எங்கள் கிராம மக்கள் வருத்தமாகவே உள்ளோம் என்றனர்.