கொடைக்கானலில், ஜூன் முதல் வாரத்தில், மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்குகிறது - கலெக்டர் தகவல்
கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறது என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யானகொடைக்கானலில் தற்போது குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது வெள்ளி நீர்வீழ்ச்சி, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நவீன கழிப்பறை, பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், ஆர்.டி.ஓ சுரேந்திரன், தாசில்தார் வில்சன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வின் முடிவில் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. அதில் கழிப்பறைகள், வாகனம் நிறுத்தும் இடம், ஏரியை சுற்றியுள்ள நடைபாதையை சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் சுமார் 15 நாட்களுக்குள் நிறைவடையும்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,500 ரோஜா வகைகளை சேர்ந்த 16 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறிய நீர்வீழ்ச்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் கொடைக்கானலில் கோடை விழா ஜூன் மாதம் முதல் வாரத்தில் மலர்கண்காட்சியுடன் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலையோரத்தில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே கடை வைக்கலாம் மற்ற கடைகள் அனைத்தும் அகற்றப்படும்.
நீதிமன்ற உத்தரவுப்படி உரிமம் இல்லாத கட்டிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்டிட உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதனை முறைப்படுத்த ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முறைப்படி விசாரணை செய்து அனைத்து தங்கும் விடுதிகளிலும், ஒட்டல்களிலும் உரிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கும்.
நகருக்கு குடிநீர் வழங்கும் கீழ் குண்டாறு திட்ட பணிகள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிவடையும். கொடைக்கானல் நகரில் உள்ள சேதம் அடைந்த சாலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகள் உள்ளதால், அவை முடிந்தவுடன் புதிய சாலை அமைக்கப்படும். அதுவரை சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் டி.ஜி. வினய் கூறினார்.