மைசூருவில் கொடூரம் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
மைசூருவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கற்பழித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு,
மைசூருவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கற்பழித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் ஜோடி
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே ஜெயப்புரா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி லிங்காபுதி பாளையா. இந்த பகுதியில் லிங்காபுதி ஏரி உள்ளது. இந்த பகுதியில் மாலை வேளையில் காதலர்கள் வந்து அமர்ந்து பேசி செல்வது வழக்கமாக உள்ளது.
அதுபோல் நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி அந்த ஏரி பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த தனிமையான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
காதலனை தாக்கி பெண் கற்பழிப்பு
அப்போது அங்கு ஒரு காரில் 6 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் காரில் அமர்ந்தப்படி மதுகுடித்துள்ளனர். மது போதை தலைக்கேறியதும், 6 பேரும் சேர்ந்து அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்துள்ளனர். அத்துடன் இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த 6 பேர் கும்பலும் சேர்ந்து காதலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் காதலனுடன் வந்த இளம்பெண்ணை மாறி, மாறி கற்பழித்துள்ளனர். காதலன் கண் முன்னே இந்த கொடூரத்தை 6 பேரும் அரங்கேற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் காரில் தப்பிச் சென்றுவிட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு இந்த கொடூர சம்பவம் பற்றி அந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தகவல் தெரிந்துள்ளது.
போலீஸ் விசாரணை
உடனே அவர்கள் விரைந்து சென்று காதலன் மற்றும் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இளம்பெண் சுயநினைவில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்சிங் மற்றும் ஜெயப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காதலனிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்துள்ளனர். மேலும் சம்பவத்துக்கு காரணமான 6 பேர் பற்றியும் போலீசாருக்கு துப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும் குவெம்பு நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தலைமறைவான 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தலைமறைவானவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், காதலனும் மைசூருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வேலை பார்த்து வருவதும், இருவரும் காதலித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்பும் வழியில் இருவரும் லிங்காபுதி பாளையா ஏரி பகுதிக்கு சென்றதும், அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பு
இந்த சம்பவம் மைசூரு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.