காகித உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு எதிரொலி: திருச்சியில் பாட நோட்டுகள் 15 சதவீதம் விலை அதிகரிப்பு

காகித உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு எதிரொலியாக திருச்சியில் பாட நோட்டுகள் 15 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.

Update: 2019-05-09 23:00 GMT
திருச்சி,

காகிதம் பணமாக, சொத்துகளை அங்கீகரிக்கும் பத்திரங்களாக, தகவல்களை சேமித்து வைக்கும் பொருளாக, சுயகுறிப்புகள் எழுத உதவும் நாட்காட்டியாக, தனிமனிதரிடமும், குழுவிடமும் தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவியாக, புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் என பல்வேறு பயன்களை மனித சமூகத்திற்கு வழங்குகின்றன. தற்போது நெகிழி உறைகளுக்கு (பாலித்தீன் பை) மாற்றாக தீங்கு விளைவிக்காத வகையில் காகித உறைகளை உற்பத்தியாளர்கள் தயாரிக்க தொடங்கி விட்டனர். சாதாரண காகிதத்துடன் இவற்றை மறுசுழற்சிக்கும் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக, கல்வி நிறுவனங்களில்தான் காகிதங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. பாடப்புத்தகங்கள், பாட நோட்டுகள், கைடுகள் (உரை நூல்), பயிற்சி ஏடுகள் என காகிதங்களின் பயன்பாடு அதிகம். தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், பாட நோட்டுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக அரசே வழங்கி விடுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் நோட்டு, புத்தகத்துக்கான கணிசமான தொகையை பள்ளி திறக்கும் முன்பே வசூலித்து விடுகிறது. எனவே, பாடப்புத்தகங்கள், பாட நோட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் சொற்ப எண்ணிக்கை அளவிலேயே அவை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக 90 சதவீதம் விற்பனை இல்லை எனவும், 10 சதவீதம் மட்டுமே பாட நோட்டுகள், கைடுகள் விற்பனை செய்யப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் காகித உற்பத்திக்கான மூலப்பொருட்கள் சரியாக கிடைக்காத காரணத்தால் மாணவ-மாணவிகளுக்கான பாட நோட்டுகள், கைடுகள் என 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் உற்பத்தி நிறுவனங்கள் நோட்டுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்து விற்பனை செய்ய தொடங்கி விட்டன.

அதாவது, 192 பக்கங்கள் கொண்ட சாதாரண பாட நோட்டுகள், தற்போது 168 பக்கங்களாக குறைக்கபட்டு கடைகளில் விற்பனை ஆகிறது. அதுபோல நீளமான பாடநோட்டுகள்(லாங்க் சைஸ்), பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற நிலையில் பாட நோட்டுகள், கைடுகளின் விலை உயர்வானது பெற்றோர்களுக்கு சிரமமாக இருந்தாலும் அது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி ஒத்தக்கடையை சேர்ந்த பாட புத்தகம், நோட்டுகள் மற்றும் இதர கல்வி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

அனைத்து விதமான காகித தயாரிப்புக்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்ததும், மூலப்பொருட்கள் சரியாக கிடைக்காததும் காகித விலை உயர்வுக்கு காரணம். எழுதுகிற மற்றும் அச்சிடுகின்ற காகிதங்கள் டன் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி, பாடநூல்கள் தயாரிப்பதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு காகிதம் இறக்குமதி செய்யப்படவில்லை. வெளிநாடுகளில் மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசால் தயாரிக்கப்படும் புகழூர் காகித ஆலையில் இருந்து உள்நாட்டுக்கு வினியோகிப்பதை விட, அக்காகிதத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதுதான் அதிக அளவில் நடக்கிறது. அங்கும், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணத்தால் உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், திருச்சியில் பாட நோட்டுகள், கைடுகள் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.

ஏ-4 சீட் பேப்பர் 500 எண்ணம் கொண்டது விலை ரூ.182 ஆக இருந்தது. தற்போது ரூ.10 அதிகரித்து ரூ.192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 7 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. தரமான நோட்டுகளுக்கு முன்கூட்டியே டெபாசிட் தொகை செலுத்தி ஒரு மாதம் கழித்துதான் அவை கடைக்கு வினியோகிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் விலை உயர்ந்து விட்டது என்பதை அறியாமல் இருக்க பழைய விலைக்கு நோட்டுகள் விற்பனை செய்கிறோம். ஆனால், அதே வேளையில் 192 பக்கங்கள் கொண்ட ஒரு கொயர் நோட்டு 168 பக்கங்களாக குறைக்கப்பட்டு விட்டது. மேலும் வணிக நிறுவனங்களில் அலுவலக பணிக்காக பயன்படுத்தப்படும் 2 கொயர் நோட்டுகள் ரூ.220-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.260 ஆக அதிகரித்து விட்டது. பள்ளிகளுக்கு மாணவர்கள் எடுத்து செல்லும் குடிநீர் பாட்டிலின் விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு சிலர் ஜி.எஸ்.டி.யால்தான் இதுபோன்ற விலை உயர்வு என்ற தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். ஜி.எஸ்.டி.-யால் பாட நோட்டுகள், புத்தகங்கள் விலை குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. காகிதம் தயாரிக்க சரியான மூலப்பொருட்கள் கிடைக்காததால் விலை உயர்ந்துள்ளது.

ஆனால், ஓட்டல்களில் பொதுமக்களிடம் ஜி.எஸ்.டி. என்ற பெயரால் கூடுதல் தொகை வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்