கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை குமாரசாமியே முதல்-மந்திரியாக நீடிப்பார் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி

கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், குமாரசாமியே முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-09 22:00 GMT
பெங்களூரு, 

கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், குமாரசாமியே முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

சித்தராமையா மீண்டும்...

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் முதல்-மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி எச்.டி.ரேவண்ணாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

குமாரசாமியே நீடிப்பார்

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். அதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அந்த விவகாரம் குறித்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர், மாநில தலைவர், முதல்-மந்திரி ஆகியோர் கவனம் செலுத்தி வருகின்றனர். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் கொடுக்கும் வேலையை செய்வதே எனது கடமையாகும். அந்த வேலையை மட்டுமே நான் செய்து வருகிறேன்.

துணை முதல்-மந்திரி பதவிக்கோ, முதல்-மந்திரி பதவிக்கோ நான் ஆசைப்படவில்லை. அதற்கான போட்டியிலும் இல்லை. கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமியே நீடிப்பார்.

சண்டை போடவில்லை

ஹாசன் மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட பொறுப்பு மந்திரியான எனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அது உண்மை அல்ல. வறட்சி நிவாரண பணிகளில் கவனம் செலுத்தும்படி மாவட்ட கலெக்டரிடம் கூறினேன். அதற்கு அவர் பதில் கூறியுள்ளார். ஏழை மக்களுக்காக வளர்ச்சி பணிகள் நடைபெற வேண்டும் என்பதே எனது நோக்கம். ஹாசன் மாவட்ட கலெக்டரிடம் ரூ.10 கோடி நிதி இருக்கிறது. அதில், ரூ.5 கோடியை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும்படி தெரிவித்திருந்தேன்.

15 நாட்கள் ஆகியும் குடிநீருக்காக மாவட்ட கலெக்டர் பணம் விடுவிக்கவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். அதுபற்றி மட்டுமே மாவட்ட கலெக்டரிடம் கேள்வி எழுப்பினேன். அவரை சட்டத்திற்கு எதிராக செயல்படும்படி கூறவில்லை. குடிநீருக்காக மக்கள் அவதிப்படுவதால், அந்த பிரச்சினையை தீர்க்கும்படி கூறினேன். இதில், எந்த தவறும் இல்லை. மாவட்ட கலெக்டருடன் நான் சண்ைட போடவும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.

இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.

மேலும் செய்திகள்