நெல்லையில் மரக்கிளை முறிந்து விழுந்து காயம் அடைந்த தொழிலாளி சாவு

நெல்லையில் மரக்கிளை முறிந்து விழுந்து காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-09 21:45 GMT
நெல்லை, 

நெல்லையில் மரக்கிளை முறிந்து விழுந்து காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மரக்கிளை முறிந்து விழுந்தது

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு வாகன காப்பகம் உள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் வரிசையாக மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலையில் ஒரு பெரிய மரத்தின் கிளை ஒன்று திடீரென்று முறிந்து விழுந்தது.

அப்போது அந்த வழியாக மீனாட்சிபுரம் நோக்கி சென்ற கார் மீது அந்த மரக்கிளை விழுந்தது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த ரெட்டியார்பட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (வயது 40) மற்றும் காரில் பயணம் செய்த 3 பெண்கள் இடிபாட்டில் சிக்கினர்.

அப்போது அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்டனர். பெண்களுக்கு காயம் ஏற்படவில்லை. டிரைவர் சுப்பிரமணியன் பலத்த காயம் அடந்தார்.

தொழிலாளி சாவு

இதற்கிடையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளி ராஜா (56) என்பவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த ராஜா, சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக பாளைங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்