திருப்போரூரில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

திருப்போரூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2019-05-09 22:00 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சிவரத்தினம். இவரது வீட்டில் 2-வது மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் சேகர் (வயது 59). இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் கோவையில் வசித்து வரும் தன்னுடைய மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். சேகர் மட்டும் வீட்டில் இருந்தார்.

நேற்று காலை 9½ மணிக்கு சேகர் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். காலை 11 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

காலை 10 மணியளவில் மர்மநபர்கள் 2 பேர் இந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது சரியான முகவரி தெரியாமல் தேடி கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பார்கள்’ என்று கூறினர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்