சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது
சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது.
சேலம்,
சேலம் செரி ரோட்டில் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்பட 19 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்பட்டது. இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இளங்கலை படிப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் கூறியதாவது:- இளங்கலை படிப்புக்காக 9 ஆயிரத்து 584 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட 7 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து வரப்பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது. அதன்படி காலையில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு ஒதுக்கீடு விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள், அகதிகள், என்.சி.சி. பிரிவு, எஸ்.டி. பிரிவு ஆகியோருக்கும், மதியம் தொழிற்பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை (சனிக்கிழமை) பி.ஏ. தமிழ் இலக்கியத்தில் சேர மாணவிகளுக்கான கலந்தாய்வு காலையிலும், மாணவர்களுக்கு பிற்பகலிலும் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி காலையில் பி.ஏ. ஆங்கிலத்தில் சேர மாணவிகளுக்கும், மதியம் மாணவர்களுக்கும் நடக்கிறது.
14-ந் தேதி கணிதம், புள்ளியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், புவியியல், கணினி அறிவியல், கணினிபயன்பாட்டியல் பிரிவுகளில் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதே பிரிவுகளுக்கு 15-ந் தேதி மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
16-ந் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல், கூட்டுறவியல், வரலாறு, பொருளியல், அரசியல்சார் அறிவியல், பொது நிர்வாகவியல் பிரிவில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதே பிரிவுகளுக்கு 17-ந் தேதி மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.