மூலனூரில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் 11 ஆடுகள் செத்தன

மூலனூரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 11 ஆடுகள் செத்தன.

Update: 2019-05-09 21:30 GMT
மூலனூர்,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் தெருக்களில் நடமாடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தப்பித்தனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், மூலனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மழை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் மூலனூரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை மூலனூர் அருகே உள்ள கன்னிமார் கோவில்புதூரை சேர்ந்த காளிங்கராயன் என்பவர் தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 11 ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று நள்ளிரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 11 ஆடுகளும் செத்திருந்தன.

தன்னுடைய 11 ஆடுகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளியங்கராயன் கண்கலங்கினார். பின்னர் இது குறித்து அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் மின்னல் தாக்கி பலியான 11 ஆடுகளையும் கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து காளியங்கராயன் கூறும் போது,எனது தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்து இருந்த 11 ஆடுகளும் மின்னல் தாக்கியதில் செத்து விட்டன. எனவே எனக்கு அரசு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்