ஆண்டிப்பட்டி அருகே, வாலிபர் சாவில் மர்மம் - புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

ஆண்டிப்பட்டி அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2019-05-09 22:30 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் பாண்டியன் (வயது25). கூலி வேலை செய்து வந்தார். மேக்கிழார்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பகலில் பாண்டியன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மதுகுடித்தார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பாண்டியன், பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கினார். சிறிதுநேரத்தில் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுவதால், பாண்டியன் இறந்ததை போலீசாருக்கு தெரிவிக்காமல் அவருடைய உறவினர்கள் புதைத்து விட்டனர். இது குறித்து பாண்டியனின் மனைவி பால்ராணி, தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக ஆண்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி தாசில்தார் பாலசுப்பிரணி முன்னிலையில், புதைக்கப்பட்ட பாண்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் பாண்டியன் சாவுக்கான காரணம் தெரியவரும்.

மேலும் செய்திகள்