புதுக்கடை அருகே கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-;
புதுக்கடை,
புதுக்கடை அருகே முஞ்சிறை, இடுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெபதாஸ் (வயது 41), ஆட்டோ டிரைவர். இவருக்கு அனி (31) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஜெபதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனக்கூறப்படுகிறது. மேலும், குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினார். ஆனால், போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினர். இதனால், ஜெபதாஸ் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் ஜெபதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த மனைவி வீட்டுக்கு திரும்ப சென்ற போது, ஜெபதாசின் பிணம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.