போச்சம்பள்ளி அருகே உயர் மின் அழுத்தத்தால் 50 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
போச்சம்பள்ளி அருகே உயர் மின் அழுத்தத்தால் 50 வீடுகளில் மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது கிராமம் அண்ணாமலைபுதூர். இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அதிக அளவு மின்வெட்டு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென உயர்மின் அழுத்தம் ஏற்பட்டதால், இப்பகுதியில் உள்ள 50 வீடுகளில் இருந்து எல்.இ.டி. டி.வி.க்கள், மின்விசிறிகள், பிரிட்ஜ், மடிக் கணினி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது. மேலும் சில மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே வெளியேறி, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயர்மின் அழுத்ததால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும் போது, கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் சீரற்ற முறையில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தான் உயர்மின்அழுத்தம் ஏற்பட்டு வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் பழுதாகி உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மின் அழுத்தம் காரணமாக பழுதான மின்சாதன பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.