தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் 19-ந் தேதி மறு ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் டாக்டர் செந்தில்குமார், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மக்கள் நீதிமய்யம் சார்பில் ராஜசேகர், நாம் தமிழர்கட்சி சார்பில் ருக்மணி தேவி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். மொத்தம் 15 வேட்பாளர்கள் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமி, தி.மு.க. சார்பில் ஆ.மணி, அ.ம.மு.க. சார்பில் டி.கே.ராஜேந்திரன், மக்கள் நீதிமய்யம் சார்பில் நல்லதம்பி, நாம்தமிழர் கட்சி சார்பில் சதீஷ் உள்பட 11 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நத்தமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மலர்விழி விசாரணை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்திய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரத சாகு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் மறுஓட்டுப் பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச் சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 181, 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகள், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 192, 193, 194, 195 ஆகிய 4 வாக்குச்சாவடிகள், ஜாலிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 196, 197 ஆகிய வாக்குச்சாவடிகள் என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
வருகிற 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் மறு ஓட்டுப் பதிவு நடைபெறும். மறு ஓட்டுப்பதிவு நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மறு ஓட்டுப்பதிவின்போது தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு ஓட்டும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் என 2 ஓட்டுகளை வாக்காளர்கள் அளிக்க உள்ளனர்.