கள்ளக்காதல் தகராறில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கி காரில் கடத்தல் பெண் உள்பட 5 பேர் கைது

கள்ளக்காதல் தகராறில் சட்டக்கல்லூரி மாணவரை காரில் கடத்திய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-09 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் சாலமன்(வயது 23). சட்டக்கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் மாலை இவர், பாலவாக்கத்தில் உள்ள தனது தந்தையின் துணிக்கடையில் இருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், கடையில் இருந்த சாலமனை வெளியே வரவழைத்தனர். திடீரென அவரை சரமாரியாக தாக்கி, தாங்கள் வந்த காரில் கடத்திச்சென்றனர்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். மேலும் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் மர்மநபர்கள் சாலமனை கடத்திச்சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக விசாரித்தனர்.

அதில் சாலமனை கடத்திய கும்பல் சென்னை அண்ணாநகர் பகுதியில் காரில் சுற்றித்திரிவது தெரிந்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அண்ணாநகர் போலீசார் உதவியுடன் கடத்தல் கும்பல் காரை சுற்றிவளைத்து பிடித்தனர். காரில் இருந்த சாலமனை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக காரில் இருந்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேனியை சேர்ந்த முகம்மது ஆரிப்(30) மற்றும் அவரது நண்பர்களான கதிர்வேல்(19), விக்னேஷ் (23), பரத்(20) மற்றும் உறவினர் மஞ்சுளா(45) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீலாங்கரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில், கடத்தப்பட்ட சாலமனுக்கும், வெட்டுவாங்கேனியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சாலமனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான பெண் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்