கருகிய நிலையில் பிணமாக கிடந்தவர் ‘போர்வெல்’ தொழிலாளி, குடும்ப தகராறில் அடித்துக்கொன்று உடலை தீ வைத்து எரித்த கொடூரம் - மகன், மருமகன் உள்பட 4 பேர் கைது

தஞ்சை அருகே கருகிய நிலையில் பிணமாக கிடந்தவர் ‘போர்வெல்’ தொழிலாளி என்பதும், குடும்ப தகராறில் அவரை அடித்துக்கொன்று உடல் எரிக்கப்பட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அவருடைய மகன், மருமகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2019-05-08 23:15 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே வல்லம் புதூர் தென்னம்பிள்ளை வாய்க்கால் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடல், தீயில் கருகிய நிலையில் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வல்லம் புதூர் கிராம நிர்வாக அதிகாரி செந்தில் குமாருக்கும், வல்லம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வல்லம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் பிணமாக கிடந்தவர் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த ‘போர்வெல்’ தொழிலாளி அருள்ராஜ்(வயது 55) என்பதும், குடும்ப தகராறில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறிய தாவது:-

தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் ‘போர்வெல்’ அமைக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருடைய மனைவி சின்னம்மாள்(50). இவர்களுக்கு ரோஸ் ஜாஸ்மின்(26) என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் ரோஸ் ஜாஸ்மின், தஞ்சை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த சபரிநாதன்(37) என்பவரை காதல் திருமணம் செய்து உள்ளார்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அருள்ராஜுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. குடும்ப தகராறு காரணமாக அருள்ராஜ், மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், இ.பி.காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி சின்னம்மாளை அருள்ராஜ் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அருள்ராஜின் மருமகன் சபரிநாதன் மற்றும் அருள்ராஜின் 17 வயது மகன், தஞ்சை விளாரை சேர்ந்த ஷேக் அப்துல்லா(32), தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கணேசன்(34) ஆகியோர் அருள்ராஜை கடத்தி சென்று இரும்பு கம்பியாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருள்ராஜின் உடலை வல்லம் புதூர் பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அருள் ராஜின் மருமகன் சபரிநாதன், அருள்ராஜின் 17 வயது மகன், தஞ்சை விளாரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கணேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி, மானோஜிப்பட்டி, பர்மா காலனி ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த சபரிநாதன் உள்பட 4 பேரையும் வல்லம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

குடும்ப தகராறில் போர்வெல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் மகன், மருமகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்