அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.84 சதவீதம் பேர் தேர்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர்,
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 666 மாணவர்களும், 4 ஆயிரத்து 712 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 378 பேர் எழுதினர். இதில் 3 ஆயிரத்து 325 மாணவர்களும், 4 ஆயிரத்து 453 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 778 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி சதவீதம் 92.84 ஆகும். தேர்வு முடிவுகள் பற்றியவிவரபட்டியல் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ன? என்பதை அறிந்து கொண்டனர். செல்போன் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் பெற்றோர் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது.
அரியலூர் மாவட்டத்தில் 82 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 21 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் அய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளி, முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 அரசு பள்ளிகள் பிளஸ்-1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 5 சுயநிதி பள்ளிகளும், 9 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் இந்த தேர்வில் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒரு பாடத்தில் கூட 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை.
கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டம் 28-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் 1 இடம் முன்னேறி அரியலூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது.