மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஓடிய மர்மநபரை பிடிக்க தீவிர நடவடிக்கை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்
வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஓடிய மர்மநபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் கூறினார்.
பெங்களூரு,
வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஓடிய மர்மநபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் கூறினார்.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் மர்மநபர்
பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 6-ந் தேதி இரவு அரபு நாட்டு உடையில் மர்மநபர் ஒருவர் மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவரை பாதுகாப்பு ஊழியர் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவியை கொண்டு சோதனை செய்தார். அப்போது இடுப்பு பகுதியில் இருந்து ‘பீப்... பீப்...’ என்ற சத்தம் கேட்டது.
இதுபற்றி கேட்டதற்கு அந்தநபர் அங்கிருந்து ஓடிவிட்டார். மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அந்த மர்மநபர் தனது முகத்தை மறைத்து இருந்தார். இதனால் அவர் பயங்கரவாதியா? என்ற சந்தேகம் எழுந்தது. மர்மநபர் வந்து செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தநபர் யார்? எங்கு உள்ளார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கைது செய்ய நடவடிக்கை
பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி இரவு மர்மநபர் வந்து சென்றது உண்மை. அவரை சோதனையிட்டபோது ‘மெட்டல் டிடெக்டர்’ கருவியில் இருந்து சத்தம் வந்தது. இதனால் அவரிடம் பாதுகாப்பு ஊழியர் விசாரித்தார். அதற்கு அந்தநபர் தான் ‘பெல்ட்’ அணிந்து இருப்பதோடு, அதில் பணம்(நாணயங்கள்) வைத்திருப்பதாக கூறினார்.
இந்த வேளையில் இன்னொரு பயணியை சோதனையிட பாதுகாப்பு ஊழியர் முயன்றபோது மர்மநபர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். மர்மநபர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மர்மநபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மர்மநபரிடம் துப்பாக்கி இருந்தது, தோளில் அணியும் ‘பேக்’ இருந்தது, துப்புரவு தொழிலாளிக்கு பணம் கொடுத்து அவர் ‘பேக்கை’ உள்ளே எடுத்து செல்ல முயன்றார் என வெளியாகி உள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானது. சந்தேகம் எழும் நபர்களை எல்லாம் பயங்கரவாதிகள் என்று கூற முடியாது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
எனவே வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலைய வாசல்களிலும் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர சோதனை
முன்னதாக, கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதை தொடர்ந்து கர்நாடகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக பெங்களூரு நகரில் விமான நிலையம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பஸ், ரெயில், விமானம், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.