நெல்லிக்குப்பம் அருகே, கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

நெல்லிக்குப்பம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2019-05-08 22:30 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சுந்தரவாண்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பழைய மற்றும் புதுகாலனி, ஊர் பகுதியில் மொத்தம் 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் பழைய காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மூலம் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கிருந்து வழங்கப்படும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து, தூர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் அவர்களது உடல்நலம் பாதிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

இதேபோல் புதுகாலனி மற்றும் ஊர் பகுதியில் உள்ள ஏனைய 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் இதன் மூலம் குடிநீர் பெற்று வரும் மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக இவர்கள், எய்தனூர் கிராமத்திற்கும், அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டுகளுக்கு சென்றும் குடிநீர் பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கோடை காலம் என்பதால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடுமையாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுக்கு தட்டுப்பாடின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்