பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், கோடைகாலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகத்தினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை என்பதை அலுவலர்களுக்கு எடுத்துரைத்து, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்கிடவும், குடிநீர் தேவை உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஆழ்குழாய் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் விதிமுறைகளின் படி உடனடியாக அகற்றப்படவும், இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய அளவு விளம்பரப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆலங்குடி, அரிமளம், கறம்பக்குடி மற்றும் கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் குழாய்களில் பழுது ஏற்படுவதை உடனுக்குடன் சரிசெய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொடர்பான பணிகளையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.