லாரி டிரைவர் கொலை வழக்கு: சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கொன்றேன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
லாரி டிரைவர் கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார். சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவரை அடித்து கொன்றதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). லாரி டிரைவர். புதுவை 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கமலக்கண்ணன் உடல் சாக்குமூட்டையில் பிணமாக கிடந்தது.
இது பற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கமலக்கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லா என்பவர் கணவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஸ்டெல்லா தனது சகோதரி ரெஜினா மற்றும் ரவுடி தமிழ்மணி உதவியுடன் கமலக்கண்ணனை கொலை செய்து பிணத்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்தனர்.
கைதான ஸ்டெல்லா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நான் சில ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்தேன். இது கணவருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து, அடித்து சித்ரவதை செய்தார். அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். எனது திட்டம் குறித்து பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த எனது சகோதரி ரெஜினாவிடம் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். நாங்கள் திட்டமிட்டபடி கடந்த 4–ந் தேதி பிள்ளைச்சாவடிக்கு எனது கணவரை வரவழைத்தோம். அங்கு ரெஜினாவின் வீட்டில் வைத்து எனது கணவருக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தேன். அதனை குடித்த உடன் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தோம்.
அங்கு, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அப்படியே விட்டால் உயிர் பிழைத்து விடுவார் என்று நினைத்தோம். இதுபற்றி ரெஜினா அவரது நண்பரான சக்தி நகரை சேர்ந்த ரவுடி தமிழ்மணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். உடனே அவர் அங்கு வந்தார்.
நானும், ரெஜினாவும், எனது கணவரின் இருகைகளை பிடித்துக்கொண்டோம். தமிழ்மணி அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்பு உடலை அங்கேயே விட்டு விட்டு நாங்கள் பிள்ளைச்சாவடி சென்று விட்டோம். மறுநாள் 5–ம் தேதி நள்ளிரவு தமிழ்மணி அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து கணவரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஸ்கூட்டரில் கொண்டு சென்று போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றார். பின்னர் எதுவுமே தெரியாதது போல நானும் இருந்தேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ரெஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.