பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.65 சதவீதம் பேர் தேர்ச்சி மாநில அளவில் 12-வது இடம்
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 96.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 12-வது இடம் பெற்றது.
கரூர்,
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மே 8-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை 9.30 மணியளவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பள்ளிக்கல்வித்துறையின் மூலம் இணையதளத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம், கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட இடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் வந்தனர். அங்கு அவர்களுக்கு கணினியில் பிளஸ்-1 மதிப்பெண்கள் விவரம் இலவசமாக நகல் எடுத்து கொடுக்கப்பட்டது.
இதே போல் தாங்கள் பயின்ற பள்ளிக்கு மாணவர்கள் நேரில் சென்று அங்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவினை நண்பர்கள், தோழிகளுடன் சென்று பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் உயர்கல்வியில் சேருவதற்கு பிளஸ்-1 மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். தேர்வு முடிவினை பார்க்க பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் தங்களது நண்பர்களிடம் நலம் விசாரித்து செல்பி எடுத்து கொண்டதையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.
மேலும் பிளஸ்-1 தேர்வு எழுதுவதற்கான உறுதிமொழி படிவத்தில் மாணவ, மாணவிகள் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப் பட்டதால் வீட்டில் இருந்தபடி செல்போனில் பார்த்து மாணவ, மாணவிகள் தேர்வு முடிவினை தெரிந்து கொண்டனர். எனினும் கடினமாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர், அவர்களது பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டியதை காண முடிந்தது.
தேர்வு முடிவு வெளியானதும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முன்பு நீண்ட நேரமாகும். ஆனால் தற்போது தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே அனைவரும் மதிப்பெண் களை செல்போன்களில் பார்த்து தெரிந்து கொண்டனர். இதனால் முன்பிருந்த பரபரப்பு தற்போது குறைந்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 தேர்வினை 105 பள்ளிகளிலிருந்து 4,901 மாணவர்கள், 5,538 மாணவிகள் என மொத்தம் 10,439 பேர் எழுதினர். இதில் 4,675 மாணவர்களும், 5,414 மாணவிகளும் என 10,089 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.65 ஆகும். இது கடந்த ஆண்டை விட (95.70 சதவீதம்) சற்று அதிகரித்து இருக்கிறது.
எனினும் மாநில அளவில் கடந்த ஆண்டு 4-வது இடம் பிடித்த கரூர் தற்போது, 12-வது இடத்துக்கு தளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை கணக்கெடுத்து தலைமை ஆசிரியர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி இனி வரும் காலங்களில் அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரூர் மாவட்டத்தில் 11 அரசு பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் 31 என மொத்தம் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும் என்று தெரிவித்தனர்.