மின்மோட்டார் சேதம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் குடிநீர் தட்டுப்பாடு

மின்மோட்டார் சேதம் அடைந்ததால் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-08 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. முகாமில் ஒரு பகுதி பொதுமக்களுக்காக 2 ஆழ்துளை கிணறு மூலம் மின் மோட்டார் அமைக்கப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஒரு மின் மோட்டார் பழுதாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அதனை பழுது பார்த்து சீரமைக்க அதிகாரிகள் முன்வராத காரணத்தால் தற்போது ஒரே ஒரு ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அகதிகள் முகாமில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் பழுதாகி இருக்கும் மின் மோட்டாரை சீரமைத்து கொடுத்தால் முகாமில் முழுமையான தண்ணீர் தேவை நிறைவுக்கு வரும் என்கிற சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதுதவிர முகாமில் அம்மன் கோவில் அருகே இருந்த 2 ஆயிரம் லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி முழுமையாக சேதம் அடைந்துவிட்டது. எனவே அந்த தொட்டியில் தற்காலிகமாக தண்ணீர் சேமிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த தொட்டியின் வாயிலாக தண்ணீர் பிடித்து கொண்டிருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்களாக பழுதாகி கிடக்கும் மின்மோட்டாரை சீரமைத்து முகாமில் தண்ணீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்ய வேண்டும். சேதம் அடைந்த தண்ணீர் தொட்டியை மாற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முகாம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்