பிளஸ்-1 தேர்வில் 97.59 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி மாநிலத்தில் 5-வது இடம்

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 97.59 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் 5-வது இடத்தை நெல்லை மாவட்டம் பிடித்தது.

Update: 2019-05-08 21:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 97.59 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் 5-வது இடத்தை நெல்லை மாவட்டம் பிடித்தது.

97.59 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நெல்லை மாவட்ட தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள் ளன. மாவட்டத்தில் 322 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 35 ஆயிரத்து 760 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 34 ஆயிரத்து 899 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 15 ஆயிரத்து 110 மாணவர்களும், 19 ஆயிரத்து 789 மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 97.59 சதவீதம் ஆகும். நெல்லை மாவட்டம் மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவில் நெல்லை மாவட்டம் 7-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 5-வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.

அரசு பள்ளிக்கூடங்கள்

இந்த மாவட்டத்தை பொறுத்த வரையில் 93 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 444 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 10 ஆயிரத்து 912 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 95.35 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்த வரையில் மாநில அளவில் 4-வது இடம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகா (நெல்லை), சீனிவாசன் (தென்காசி), விஜயலட்சுமி (வள்ளியூர்), சம்பத்குமார் (சங்கரன்கோவில்), சுடலை (சேரன்மாதேவி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்