சகாப்தம் முடிந்துவிடும்: 23–ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

வருகிற 23–ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது, அதன் சகாப்தம் முடிந்துவிடும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

Update: 2019-05-08 23:15 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றம் பகுதியில் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

வாரணாசியில் பிரதமர் மோடியை தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்த்தபோது, தேனியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படக்கூடும் என்று சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் கோவையில் இருந்து புதிய மின்னணு எந்திரங்கள் வந்துள்ளது. அது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்–அமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல் தற்போதைய நிலையும் உள்ளது. ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு ஊழல் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி அரசு கலைக்கப்பட வேண்டும் என்று எல்லோருடைய எண்ணமும் உள்ளது.

ஊழல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். எனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என்று எந்த தொகுதியிலும் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்காது. ஊழல் மிகுந்த அ.தி.மு.க. ஆட்சியை கலைக்கப்பட வேண்டும். அது போன்ற நிலை வரும்போது, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். 22 சட்டமன்ற தொகுதியிலும் கருவாடு மீன் ஆகுமா? என்ற நிலைதான் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும். வருகிற 23–ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. அதன் சகாப்தம் முடிந்துவிடும். மீண்டும் கால் ஊன்ற கூட முடியாது. டி.டி.வி.தினகரன் தலைமையில் நல்லாட்சி ஆட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்