தங்கதமிழ்செல்வன் பேட்டி மூலம் “தி.மு.க.-அ.ம.மு.க. உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“தங்கதமிழ்செல்வன் பேட்டி மூலம் தி.மு.க.-அ.ம.மு.க. உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
தூத்துக்குடி,
“தங்கதமிழ்செல்வன் பேட்டி மூலம் தி.மு.க.-அ.ம.மு.க. உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இரவில் தூத்துக்குடியில் ஓய்வெடுத்த முதல்-அமைச்சர் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
இதற்காக விமான நிலையத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-அ.ம.மு.க. உறவு
தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் உறவு வைத்து உள்ளார்கள். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள் என்று நான் பேசி வந்தது தங்கத்தமிழ்செல்வன் பேட்டி மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மைனாரிட்டி ஆட்சியை தி.மு.க.தான் நடத்தி வந்தது. நாங்கள் அல்ல. அ.தி.மு.க.வில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்காலத்தில் 22 தொகுதியில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு எங்கள் ஆட்சி தொடரும்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவரது கனவு பலிக்காது என்பது மக்களுக்கு தெரியும். ஒரு அர்ப்ப ஆசைக்காக வருகிற 23-ந் தேதி வரை இப்படி பேசிக் கொண்டு இருக்கலாம். அதன்பிறகு கனவுகூட காண முடியாது.
இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு
தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார். அவரது வழியில் தற்போதைய அரசு அதனை கடைபிடித்து வருவதால், திறமையான மாணவர்கள் உருவாகி வருகின்றனர். இதனால் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்வேறு பணிகளில் சேரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். இதில் ரூ.3 லட்சத்து 437 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த திட்டங்கள் நிறைவேறும்போது நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 10 திட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க அடுத்த மாதம் (ஜூன்) அடிக்கல் நாட்ட உள்ளோம்.
தோல்வி பயம்
தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். வெற்றி பெறும் கட்சி எதையும் கூறமாட்டார்கள். தோல்வி பெறும் கட்சி பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். இதனால் எங்கள் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி ஆதரவோடு வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.