நெல்லை ரெயில் நிலையம் அருகில் ஓடும் கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு டிரைவர் உள்பட 2 பேர் காயம்

நெல்லை ரெயில் நிலையம் அருகில் ஓடும் கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-08 22:00 GMT
நெல்லை, 

நெல்லை ரெயில் நிலையம் அருகில் ஓடும் கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

மரக்கிளை விழுந்தது

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக 3 பெண்களை சுப்பிரமணி தனது காரில் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்புக்கு வந்தார்.

சந்திப்பு ரெயில் நிலையத்தை கடந்து ரெயில்வே பீடர் ரோட்டில் மீனாட்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டையொட்டி நின்றிருந்த பழமையான மருத மரத்தில் ஒரு பெரிய கிளை முறிந்தது. அந்த மரத்தின் கிளை சுப்பிரமணியின் கார் மீது திடீரென்று விழுந்தது.

2 பேர் காயம்

இதில் காரின் முன்பகுதி மற்றும் பின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் சுப்பிரமணி உள்பட 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இதைக்கண்ட அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் காரின் பின்பகுதி இருக்கையில் அமர்ந்திருந்த 3 பெண்களை பத்திரமாக மீட்டனர்.

சுப்பிரமணியின் ஒரு காலில் மரக்கிளை குத்தியதில் சிதைந்து முறிவு ஏற்பட்டது. அவரை காருக்குள் இருந்து உடனடியாக மீட்கமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அவர்கள் மரக்கிளைகளை வெட்டி சுப்பிரமணியை மீட்டனர். இதற்கிடையே கடையநல்லூரை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அவரும் மரக்கிளை விழுந்ததில் காயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதையடுத்து சுப்பிரமணி மற்றும் அந்த முதியவர் ஆகியோரை மீட்டு போலீசார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்