நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 280 இடங்களை பெறுவது கடினம் சஞ்சய் ராவத் சொல்கிறார்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து 280 இடங்களை பெறுவது கடினம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து 280 இடங்களை பெறுவது கடினம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பொதுச்செயலாளர் பேட்டி
பா.ஜனதா கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் “பா.ஜனதா நடப்பு தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினமாகும். நாங்கள் தனியாக 271 இடங்களை கைப்பற்றினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் எளிமையாக பெரும்பான்மை பெறும்” என கூறினார்.
இதே கருத்தை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் எதிரொலித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மோடி பிரதமராவதில் மகிழ்ச்சி
பா.ஜனதாவின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியது உண்மையானது தான். தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும். பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். தற்போதைய சூழலில் பா.ஜனதா 280 முதல் 282 எண்ணிக்கையை தனித்து பெறுவது சற்று கடினமான விஷயமாகும். இருப்பினும் எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் தனிப்பெரும்பான்மை பெறும்.
ராம் மாதவின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். சிவசேனாவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாகும். எங்களுக்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதில் மகிழ்ச்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.