கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘திடீர்’ மாற்றம் அரசியல் கட்சியினர் முற்றுகை

கோவையில் இருந்து தேனி தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்வதாக தாலுகா அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-07 21:45 GMT
தேனி,

கோவையில் இருந்து தேனிக்கு 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. இவை தேனி தாலுகா அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. அவை அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சியை சேர்ந்த மூன்று பேர் மட்டுமே அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதர கட்சி நிர்வாகிகள் வருவதற்கு முன்பாகவே அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் எதற்கு வந்துள்ளது? என்று அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மறு வாக்குப்பதிவு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கு தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி வந்தார். அவர் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்ற முயற்சி செய்வதாக கூறி அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன் அங்கு வந்தார். அவரும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட வேண்டும் என்று மனுக்கள் அளித்தால் அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கி அறையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது அரசியல் கட்சியினர், மாவட்ட கலெக்டர் நேரில் வரவேண்டும் என்றும், வராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. அப்போது தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்வதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் கோவைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

அதற்கு கலெக்டர் அப்படி எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்றும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மீண்டும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறந்து பெட்டிகளை பார்வையிட அனுமதிப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்