தமிழகத்தில் கல்விக்காக தனி டி.வி. சேனல் கொண்டு வரப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் கல்விக்காக தனி டி.வி. சேனல் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-05-07 22:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் மாநிலமாக, தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாக, கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தருகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை கொண்டு வருவதற்கான பணிகள் ஜனவரி மாதம் நிறைவேற்றப்படும்.

வருகிற ஜூலை மாத இறுதிக்குள் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9, 10, 11, 12-ம் வகுப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் அனைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் அரசு சார்பில் இ-லைப்ரரி என்ற முறையில் கம்ப்யூட்டர் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வதற்கு நூலக வசதி கொண்டு வரப்படும்.

இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த 15 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக கல்விக்காக தனி டி.வி. சேனலை கொண்டு வருவதற்கும், ரோபோ மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சும் அளவுக்கு தரமான சீருடைகள் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை மாற்றும் பணி நிறைவு பெற்றுவிட்டது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

அப்போது நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, கோவில் முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்