திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-07 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நல்லமுறையில் நடைபெற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம்வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியிலும், ஸ்ரீராம் தொழில்நுட்பக்கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீராம் கல்வி நிலையத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஸ்டிராங்ரூம்களுக்கு 24 மணி நேரமும் தாசில்தார், துணை தாசில்தார் அளவில் வருவாய்த்துறையினரும், துணை போலீஸ் சூப்பிரண்டு அளவில் காவல் அலுவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையான அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறையின் வாகனம் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டு தயார் நிலையிலும் தீயணைப்பு சாதனங்களும் உள்ளது. வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தங்கி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கேயே தங்கி கண்காணித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 4 ஆயிரத்து 924 தபால் வாக்குகள் வரப்பெற்று அதை எண்ணுவதற்கான பயிற்சிகள் காணொலி காட்சி வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய 261 ஊராட்சிகளில் 725 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 49 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அனைவரும் பயன்படும் வகையில் செயல்படவேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக 5 நகராட்சிகளில் 463 வாக்குச்சாவடிகள், 10 பேரூராட்சிகளில் 216 வாக்குச்சாவடிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்து 554 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 233 வரைவு வாக்குச்சாவடிகளில் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

2011–ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை விட நகராட்சிகளில் 55 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகளில் 17 வாக்குச்சாவடிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 192 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 264 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்