காட்டுமன்னார்கோவிலில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
காட்டுமன்னார்கோவிலில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றார்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அய்யனார்கோவில் தெருவில் வசிப்பவர் தமிழ்செல்வன் (வயது 32). கவரிங் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் உத்திரசோலையை சேர்ந்த கயல்விழி (30) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சிவதாரணி என்ற பெண் குழந்தை இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கயல்விழி, தமிழ்செல்வனிடம் மகள் சிவதாரணியை இந்த ஆண்டு தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அதிக பணம் செலவாகும் என்று கூறி தமிழ்செல்வன் மறுப்பு தெரிவித்தார். இதனால் கயல்விழி வீட்டை விற்று மகளை படிக்க வைக்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் காலை கயல்விழிக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் தமிழ்செல்வன் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கயல்விழி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து தனது மகள் சிவதாரணிக்கு கொடுத்தார். பின்னர் அந்த விஷத்தை தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இருவரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கயல்விழி, சிவதாரணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை சிவதாரணி பரிதாபமாக உயிரிழந்தாள். கயல்விழிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்செல்வனின் தாய் கவுரி காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.