சமயபுரம் அருகே பரிதாபம், வறுமை வாட்டியதால் வயதான தம்பதி தற்கொலை

சமயபுரம் அருகே வறுமை வாட்டியதையடுத்து வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-05-07 23:00 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் 8-வது கிராசை சேர்ந்தவர் முத்தையா (வயது 70). இவரது மனைவி சம்பூர்ணம் (61). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

மகள்கள் இருவரும் திருமணமாகி சென்ற பிறகும், வயதான முத்தையா, சம்பூர்ணம் தம்பதியினர் தங்களால் முடிந்த கூலிவேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்தனர். முத்தையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அப்போது, வயதை காரணம் காட்டி அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். அதன்பின் அவர் பல்வேறு இடங்களில் வேலைகேட்டும், அவருக்கு வேலைகொடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல சம்பூர்ணத்திற்கும் வேலை யாரும் வழங்கவில்லை. இதனால் அவர்கள் போதிய வருமானம் இன்றி வாழ்க்கையை நடத்த கடும் சிரமம் அடைந்தனர்.

வறுமை வாட்டியதால் அவர்கள் ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் பசியால் வாடினர். மேலும் அவர்கள் பலரிடம் உதவிகேட்டும், யாரும் உதவி செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 4-ந்தேதி வீட்டில் அவர்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை தற்செயலாக பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சம்பூர்ணம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா மாலையில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்