விலையில்லா வேட்டி– சேலை உற்பத்திக்கு 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கூலியை அதிகரிக்க வேண்டும்; விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை

விலையில்லா வேட்டி– சேலை உற்பத்திக்கு 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கூலியை அதிகரிக்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-05-07 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் பிச்சமுத்துவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 48 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் விலையில்லா வேட்டி– சேலைகள் மற்றும் பள்ளிக்கூட சீருடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் 10 முதல் 20 தறிகள் உடைய சிறு, குறு விசைத்தறி கூடங்களில் அதிகமாக விலையில்லா வேட்டி–சேலைகளை உற்பத்தி செய்கின்றோம். 3.75 மீட்டர் நீளத்தில் வேட்டியும், 5.5 மீட்டர் நீளத்தில் சேலையும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படாமல் ஒரே கூலியில் விலையில்லா வேட்டி–சேலைகளை உற்பத்தி செய்து தருகிறோம். கடந்த 2011–ம் ஆண்டு ஒரு வேட்டி உற்பத்தி செய்ய 16 ரூபாயும், சேலை உற்பத்தி செய்ய 28 ரூபாய் 16 காசும் கூலியாக கொடுக்கப்பட்டது. கடந்த 2012–ம் ஆண்டு ஒரு வேட்டிக்கு 18 ரூபாய் 48 காசும், சேலைக்கு 31 ரூபாய் 60 காசும், 2013–ம் ஆண்டு வேட்டிக்கு 21 ரூபாய் 60 காசும், சேலைக்கு 39 ரூபாய் 27 காசும் வழங்கப்பட்டது. அதுவும், நூலின் தடிமன் 60 பிக்கில் இருந்து 64 பிக்காக உயர்த்தப்பட்டதால் இந்த கூலி உயர்வு வழங்கப்பட்டது.

இந்த கூலியே இப்போதும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் நெசவாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. தற்போது அரசால் ஒரு பிக்கிற்கு 9 காசு வீதம் கூலி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூலியை 15 காசு வரை உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு வேட்டியை நெசவு செய்ய நெசவாளர்களுக்கு கூலியாக 9 ரூபாயும், மின் கட்டணம், உதிரி பாகங்கள், வாடகை, ஆட்கள் கூலி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவு 14 ரூபாய் 50 காசு என மொத்தம் 23 ரூபாய் 50 காசு செலவாகிறது. இதேபோல சேலை உற்பத்திக்கும் கூடுதல் செலவாகிறது. ஆண்டுதோறும் செலவு அதிகரித்த போதிலும், கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

கடந்த 2013–ம் ஆண்டு ரூ.225 கோடி மதிப்பிலான விலையில்லா வேட்டி–சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. நடப்பாண்டில் விலையில்லா வேட்டி–சேலைகளின் உற்பத்திக்காக ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவுகள் பல மடங்கு உயர்ந்த போதிலும் கூலி மட்டும் உயர்த்தி தரப்படவில்லை. இதன் காரணமாக கூட்டுறவு விசைத்தறி நெசவாளர் சங்கங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

எனவே சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் நெசவுக்கூலியை வேட்டிக்கு பிக் ஒன்றுக்கு 15 காசாக உயர்த்தி ரூ.36 ஆகவும், சேலை பிக் ஒன்றுக்கு 15 காசாக உயர்த்தி ரூ.52 ஆகவும், பள்ளிக்கூட சீருடைகளுக்கு பிக் ஒன்றுக்கு 15 காசாக உயர்த்தி மீட்டருக்கு 12 ரூபாய் 60 காசாகவும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்