ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை
ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்களை கால்சியம் கார்பைடு கற்கள் அல்லது செயற்கை ரசாயனப் பொருட்களை தெளித்தோ பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது.
அதுபோல் அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம், சப்போட்டா உள்ளிட்ட பழங்களையும் ரசாயனங்கள் வைத்து பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்சியம் கார்பைடு, எத்திலீன் ஆகிய ரசாயனங்களை தெளித்து பழுக்க வைக்கப்படும் பழங்கள், சிலமணி நேரத்தில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களைவிட கூடுதலான மஞ்சள் நிறமாக மாறும். ஆனால் வாசனை இருக்காது. இனிப்பு சுவை மிகவும் குறைவாக இருக்கும்.
ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உணவு பாதையில் அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பழங்களை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் இதுதொடர்பாக தொடர் சோதனை செய்து வருகிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பழங்கள் வாங்கும்போது அடிபட்ட பழங்கள், சிறிதளவு அழுகிய பழங்களை குறைந்தவிலையில் வாங்கி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைக்க உணவு பாதுகாப்பு துறை மூலம் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் நலக்கல்வி அளிக்கப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ரசாயனங்கள் மூலம் மாம்பழங்கள் மற்றும் பிற பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.