உத்தமசோழபுரம், மேச்சேரி கோவில்களில் மழைவேண்டி யாகம்
உத்தமசோழபுரம், மேச்சேரி கோவில்களில் மழைவேண்டி யாகம் நடந்தது.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழ புரம் கரபுரநாதர் கோவிலில் மழைவேண்டி அறநிலையத்துறை சார்பில் யாகம் நடந்தது. இதையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது.
யாகத்தில் பல்வேறு வகையான மூலிகை பொருட்கள் போடப்பட்டன. இதில் கலந்து கொள்ள உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி, பூலாவரி, பெரியபுத்தூர், கொண்டலாம்பட்டி, வீரபாண்டி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இசைக்கலைஞர்களால் வயலின், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி போன்ற ராகங்கள் வாசித்து வழிபாடு செய்யப்பட்டது. வருண சூக்த வேதபாராயணம், வருணகாயத்ரி மந்திர பாராயணம் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்த யாக வேள்வியில் கோவில் செயல் அலுவலர் ராஜா, பணியாளர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.