13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கு: வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை
13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில் வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை கீழ 5-ம் வீதியில் வசித்து வந்தார். இந்நிலையில் மாரிமுத்து கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறி அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் மாரிமுத்து மணமேல்குடி கோடியக்கரை கடலில் பிணமாக மிதந்தார்.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமானதாக புகார் அளித்தனர். அப்போது வங்கி அதிகாரிகளிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் முதல்கட்ட விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வங்கிக்கு நேரடியாக சென்று வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.