ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.;

Update: 2019-05-06 21:30 GMT
வடக்கன்குளம், 

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் சமய வகுப்பு மாநாடு, இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 8-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 9-ம் திருவிழாவான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முத்தாரம்மன், பத்திரகாளியம்மன், வேதாளம் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான 15-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு முத்தாரம்மன், மஞ்சள் மாரியம்மன் வீதிஉலா, மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மாலை 3 மணிக்கு சுடலை ஆண்டவர் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 6 மணிக்கு வாண வேடிக்கை, செண்டை மேள முழங்க நடக்கிறது. ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்