ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் நடந்தது என்ன? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றியும், அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தும் திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

Update: 2019-05-06 23:15 GMT
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.

மாலையில் அவர் மதுரை விரகனூரில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, ஐராவதநல்லூர், சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, பனையூர், வலையங்குளம், பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஆதரவு கேட்டு பேசினார். எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் திரளாக நின்று பூத்தூவி வரவேற்றனர். மேளம், தாளம் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. கோட்டை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எக்கு கோட்டையாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி விளங்குகிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் முனியாண்டியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பிரசாரம் செய்த போது பல்வேறு கருத்துகளை சொல்லி விட்டு சென்றுள்ளார். ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களை அரசு நியமித்து இருந்தது. அவரை கண்காணிக்கும் மருத்துவக்குழுவின் நோடல் அதிகாரியாக தமிழக அரசு மூலம் டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட, டாக்டர் பாலாஜி முன்னிலையில் ஜெயலலிதாவிடம் படிவத்தில் கை ரேகை பதிவு செய்து தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. அது தான் குற்றம் என்று சொல்லி இருக்கிறார்கள். ரேகையில் தப்பு என்று அவர்கள் சொல்லவில்லை. அதை வாங்கிய முறைதான் சரியில்லை என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

அப்போதும், தற்போதும் போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளர் சரவணன், கை ரேகை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவிற்கு மருத்துவக்குழு வழங்கிய மருத்துவ சிகிச்சை குறிப்பினை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மூலமாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர் மூலமாகவும் உறுதிப்படுத்தாமல் படிவம்-ஏ, படிவம்-பி ஆகியவற்றினை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தினை ஆதாரமாக கொண்டு, தலைமை தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டதைத்தான் குறை என்று ஐகோர்ட்டு கூறியதே தவிர, கைரேகை குறித்து தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே திட்டமிட்டு ஒரு பொய்யான தகவல்களை ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

படிவங்களில் கைரேகை வாங்கும்போது அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவும், சிகிச்சை அளித்த டாக்டர் மூலமாகவும்தான் அதை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் அதை பொய்யாக்கி தவறான செய்திகளை பரப்பும் ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

இதுதவிர மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் வைத்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தி.மு.க. 14 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தது. அப்போது எத்தனை லட்சம் தமிழக இளைஞர்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளனர்? தங்களின் குடும்பத்தை பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர, மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. இவ்வளவையும் செய்துவிட்டு, தற்போது வேண்டும் என்றே ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

அ.தி.மு.க. அரசு அறிவித்த அத்தனை திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. தைப்பொங்கல் திருநாளுக்கு அனைத்து மக்களுக்கும் ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது. அதை கூட தடுத்து நிறுத்திய கட்சி தி.மு.க. என்பது உங்களுக்கு தெரியும்.

அதேபோல் ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதையும் தடுத்து நிறுத்த தி.மு.க. வக்கீல் ஆர்.எஸ்.பாரதி மூலம் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார்கள். தேர்தல் முடிந்த உடன் அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் நிதிஉதவியை அ.தி.மு.க. அரசு வழங்கும். ஏழைகளுக்கு கொடுப்பதில் என்ன தவறு?

மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் கட்சி. மக்களுக்கு நன்மை செய்கிற திட்டத்தை தடுக்கிற கட்சிக்கு தேர்தல் மூலமாக மக்கள் உரிய பாடத்தை புகட்ட வேண்டும். இது உங்களுடைய அரசு. மக்களுக்கு தேவையான திட்டங்களை அ.தி.மு.க. அரசு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளாம். எய்ம்ஸ் மருத்துவமனை இந்த சட்டமன்ற தொகுதியில் தான் அமைகிறது. அதேபோல் இந்த பகுதியில் ரிங் ரோட்டையும் அ.தி.மு.க. அரசு தான் அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.214 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மேலும் எங்கெங்கலாம் மேம்பாலம் வேண்டுமோ அங்கு எல்லாம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே சிறந்த உட்கட்டமைப்பு உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன். எனவே வருகிற 19-ந்தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், வேட்பாளர் முனியாண்டிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்த போது, எடப்பாடி பழனிசாமி திடீரென்று பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள வீதிகளில் நடந்து சென்று முதியவர், பெண்கள், கடைக் காரர்கள் என பலரிடம் அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்.

முதல்-அமைச்சர் தங்கள் தெருவில் வருவதை அறிந்து, அந்த பகுதி மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் முதல்-அமைச்சர் அவர்களை நோக்கி கைகூப்பி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டார். இவ்வாறு வாக்கு சேகரித்துவிட்டு, வாகனத்தில் ஏறி மீண்டும் பிரசாரத்தை தொடர்ந்தார்.

மேலும் செய்திகள்