வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களமேடு,
மங்களமேட்டையை அடுத்துள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரும், இவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் மதியம் துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தராஜ் வீட்டின் அருகே உள்ளவர்கள் கோவிந்தராஜின் வீட்டை பார்த்தபோது அதன் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். இதுகுறித்து அவர்கள், கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்த நிலையில், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.